உலகில் இளையோர் / இளைஞர் ரெட் கிராஸ் ரெட் கிராஸ் துவங்குவதற்கு மூன்று நிகழ்வுகள் அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.
1884.ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள ஓகையோ (Ohio) என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு உதவ ஆறு சிறுவர்களும், ஆறு சிறுமியர்களும் சேர்ந்து ஒரு குழு தங்களால் முடிந்த பணத்தைச் சேமித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு உதவ கிளாரா பர்டன் (Clara Barton) அவர்களுக்கு அனுப்பி வைத்தனர். கிளாரா பர்டன் அவர்கள் அதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழை விதவைக்கு அனுப்பினார். இதன்பயனாக, ஒரு குடிசை அமைக்கப்பட்டு அதன் மேல் Little Six Red Cross Landing என எழுதப்பட்டிருந்தது. கிளாரா பர்டன் அவர்கள் 1881 ஆம் ஆண்டில் அமெரிக்க ரெட் கிராஸை நிறுவினார்.
நிகழ்வுகள் - 2
1899.ம் ஆண்டு முதல் 1902ஆம் ஆண்டு வரை நடந்த போயர் (Boer) போருக்கு கனடா நாட்டு வாலிபர்கள் ஒரு குழு, அமைத்து, தங்களால் முடிந்த உதவிகளை கனடா நாட்டு ரெட் கிராஸிற்கு கொடுத்து உதவினர்.
மேலும் குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவெனில், நம் தேசப்பிதாவாகிய மகாத்மா காந்தி அவர்கள் தன் இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் நடத்த போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் "ஆம்புலன்ஸ் கார்ப்ஸ்" எனப்படும் தன்னார்வ மருத்துவக் குழுவை அமைத்து, ரெட் கிராஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றினார்.
நிகழ்வுகள் - 3
கனடாவிலுள்ள கியூபெக் பகுதி பள்ளி மாணவர்கள் முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காயம்பட்ட வீரர்களுக்கு பயன்படும் மருத்துவ உபகரணங்கள், துணிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் பொருட்களைச் சேகரித்து அனுப்பினர். 1915.ம் ஆண்டுக்குள் பல பகுதிகளுக்கும் ரெட் கிராஸ் பரவியது.
முதல் உலகப் போருக்கு பிறகு இளையோர் / இளைஞர் ரெட் கிராஸ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துவங்கக் காரணமாயிற்று.