தேனி, 20.06.2026
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 20.06.2026 சனிக்கிழமை அன்று கோடாங்கிபட்டி ஊராட்சிமன்ற சமுதாயக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, தேனி மாவட்ட துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட கௌரவச் செயலாளர் திரு.க.சுருளிவேல் அவர்கள் வரவேற்புரை ஆற்றி முகாமின் நோக்கத்தையும், பொதுமக்கள் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
இம் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.துர்காதேவி MS., அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விரிவான கண் பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் மொத்தம் 132 பயனாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அவர்களில் 13 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான திரு.எஸ்.காமராஜ் அவர்கள், திரு.ஆர்.சத்திய மூர்த்தி அவர்கள், திரு.வி.பி.அழகேந்திரன் அவர்கள், திருமதி.கே.நாகஜோதி அவர்கள், திரு.கார்த்திகேயன் அவர்கள், திரு.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும், ரெட் கிராஸ் அலுவலக ஒருங்கிணைப்பாளர் திரு.சாய் செந்தில் குமார் அவர்கள் முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட பொருளாளர் திரு.எஸ்.முகமது ஷேக் இப்ராஹிம் அவர்கள் நன்றியுரை வழங்கி, முகாமை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மருத்துவக் குழுவினருக்கும், நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இம்முகாம் பொதுமக்களின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பார்வை இழப்பைத் தடுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரிதும் உதவிய ஒரு பயனுள்ள சமூக நல நிகழ்வாக அமைந்தது.